வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் எதிர்ப்பை தெரிவித்து வெளியேறினார் கோறளைப்பற்று தவிசாளர்


இன்றைய தினம் (29.03.2020) காலை 10.00 மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற அவசர, விசேட கூட்டமானது வாழைச்சேனை பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை சபையின் தவிசாளர், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் தவிசாளர், கோறளைப்பற்று, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கோறளைப்பற்றின் மூன்று பிரிவுகளுக்குமான பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பிரதேச சபை, செயலக உத்தியோகத்தர்கள், மற்றும், வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச முஸ்லிம் வர்த்தகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


இக்கூட்டமானது தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸ் நோய்த்தொற்று அச்சத்திலிருந்து எமது பிரதேசத்தையும், மக்களையும் எவ்வாறு பாதுகாப்பது மற்றும், நாளைய தினம் காலை 10.00 மணிமுதல் பி.ப.02.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளையில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பொதுச் சந்தையி சன நெரிசல் ஏற்படும் போது எவ்வாறு மக்களை கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆலோசனையினை பெறும் அவசர கூட்டமாகவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இதனை முற்றாக மறுத்த கோறளைப்பற்று தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் அவர்கள், தற்போதைய சூழலில் மக்களை பொது இடங்களில் ஒன்று சேர்க்கும் பொதுச்சந்தை முறையானது எமது பிரதேசத்தினையும் ஏனைய பிரதேசங்களை போல வைரஸ் நோய்த்தாக்கம் பரவும் அபாயகரமான பிரதேசமாக மாற்றுவதற்கான ஓர் நடவடிக்கையாகவே அமையும் என்பதையும், இத்தகைய பொதுச்சந்தை வியாபாரத்தின் போது பொது மக்களும், வர்த்தகர்களும் தாங்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி கடந்த ஊரடங்கு சட்ட தளர்வு (26.03.2020) காலப்பகுதியில் எமக்கு சிறந்த அனுபவமாக பாடம் புகட்டியுள்ளனர். எனவே இதற்கமையவும், மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் பகிரங்க வேண்டுகோளுக்கு அமையவும் எமது பகுதியில் முற்றாக பொதுச்சந்தைகளை மூடி, நடமாடும் வியாபாரத்தினை முன்னெடுக்கவும், அதற்கான ஆர்வலர்களை இணைத்து அவர்களுக்கான உரிய அனுமதியினை வழங்கி இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது. மேலும்,


இதற்கமைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்பின் பேரிலும், தற்போதைய சூழலுக்கு ஏற்பவும் நாளைய தினம் சகல பொதுச்சந்தைகளையும் மூடி, மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரத்தை மேற்கொள்வதே சிறந்ததென இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவராலும் கூறப்பட்டது. இதன் போது கருத்துரைத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அவர்களால் நடமாடும் வாகன, வியாபாரிகளின் பற்றாக்குறையினால் இப்பிரதேசத்தை சேர்ந்த சகல மக்களுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வியாபார முறையின் மூலம் விநியோகிப்பதில் பாரிய சவால் உள்ளதாகவும், நாளைய தினம் அடையாளப்படுத்தப்படும் இடங்களில் பொதுச்சந்தைகளை அமைத்து உரியமுறையில் மக்களையும், வர்த்தகர்களையும் நெறிப்படுத்தி வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.

இதனால் மக்கள் எதிர்காலத்தில் எத்தகைய சூழலிலும் தமக்கான அத்தியாவசிய பொருட் தேவைகளுக்காக பொது இடங்களில் கூடவோ அல்லது, அபாயகரமான சூழலை உருவாக்கவோ மாட்டார்கள் என்பதே எமது அனைவரதும் எதிர்ப்பார்ப்பு என்றார்.


இத் தீர்மானத்திற்கு கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தனது அதிர்ப்தியை தெரிவித்ததோடு, இந்த கொடிய நோயின் பிடியில் இருந்து மீள அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன. அத்தோடு இந்நோயின் காரணமாக இறப்பவர்களின் இறுதிக் கிரிகைகளை நடாத்துவதற்குக்கூட சொந்தங்களுக்கு முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலை எமது பிரதேசத்துக்கும் உருவாக யாராவது ஒருவருக்கு இவ் வைரஸ் தொற்று ஏற்பட்டாலே போதும். ஆகவே மக்களின் பாதுகாப்பினை பொருட்படுத்தாமல் இன்று எடுக்கப்பட்டுள்ள தங்களது இத்தீர்மானத்தில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும், இச்செயற்பாட்டிற்கு முன்னிற்போர் மக்களது பாதுகாப்பிற்கு முழுப் பொறுப்பினை எற்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி கோறளைப்பற்று தவிசாளர் தனது எதிர்ப்பினையும் தெரிவித்து இக்கூட்டத்திலிருந்து வெளியேறிமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதனையே ஏனையோரும் வலியுறுத்திய போதிலும், ASP அவர்களால் நாளைய தினத்தில் மட்டும் பொதுச் சந்தைகளை திறந்து பொலிஸாரை கொண்டு நெறிப்படுத்துவதாகவும், ஏதேனும் பாரதூரமான விளைவுகள் ஏற்படின் அதற்கு தானே முழுமையான பொறுப்பினை எடுப்பதாகவும் கூறி பொதுச் சந்தை நடாத்துவதற்கான ஏற்பாடை நாளை முன்னெடுப்பதாகவும் தனது தீர்மானத்தை தெரிவித்தார்.

இத்தீர்மானமானது எமது பிரதேச நலன் குறித்து ஆக்க பூர்வமான கருத்துக்களையும், எதிர்ப்பார்க்களையும். முன் வைத்த தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பிரிவினர் ஆகியோரிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

Powered by Blogger.