17.03.2020, கொரோணாவின் கோரத் தாண்டவம் உலகெங்கும் வியாபித்துக் கிடந்தது. இலங்கையும் விதிவிலக்கல்ல என்று எங்கும் பரபரப்பாகவே இருந்து. உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 43 ஐத் தொட்டது என்ற செய்தி அனைவரையும் தூக்கி வாரிப் போட்டது. மட்டக்களப்பிலும் ஒரு நோயாளி உறுதி செய்யப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு நகரம் முடங்கிப் போய் கிடந்தது. வீதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி மயான அமைதி நிலவியது. எல்லா நிறுவனங்களும் முடங்கிக் கிடந்த வேளை வைத்தியசாலை கதவுகள் என்றும் போல் திறந்தே இருந்தது. ஆனாலும் வழமைக்கு மாற்றமாக நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. இரவு ஒன்பது மணியளவில் விடுதியில் இருந்த நோயாளிகளை பார்த்து வோட் ரௌண்டை Ward round முடித்து விட்டு கைகளை கழுவிக் கொண்டிருந்த வேளை எனது போன் அலறியது. மறு முனையிலே மைக்ரோபயாலாஜி மெடம் (Microbiologist - நுண்ணங்கியியல் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர் ) அழைப்பிலே காத்திருந்தார்.
"ஹலோ மெடம்"
"ஹலோ, Corona Suspect பேசன்ட் ஒன்டு அம்பியுலன்ஸில் வந்திட்டிருக்கு, ப்ளீஸ் ரெடி டு ரிஸீவ் த பேசண்ட், "
" ஒகே மெடம், ஐ வில் பி தெயார் இன் டென் மினிட்ஸ்" என்று சொல்லிவிட்டு வேகமாக எனது க்வார்டஸ்ஸை நோக்கி நடந்தேன்,மனதிலே பல்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. உலகமே ஒரு வகையான பீதியில் உறைந்து போயுள்ள நிலையில், கொரோனா நோயாளியை கண்டால் மக்களெல்லாம் வெருண்டோடும் நிலையில் நான் கொரோணா நோயாளியை சந்திக்கப் போகிறேன், அவரோடு உரையாடப் போகிறேன், அவரை தொட்டு பரிசோதிக்கப் போகிறேன் என்று எண்ணும் போது உடல் சற்று புல்லரித்துப் போனது. இந் நோயாளியை சிகிக்சையளிக்கும் போது எனக்கு இவ் வைரஸ் தொற்றி விட்டால்...? சரி பரவாயில்லை, எனக்கும் குடும்பம் இருக்கிறது, பெற்றோர், மனைவி , குழந்தைகள் ... என நினைக்கும் போது மனம் பதபதத்துப் போனது. எல்லோரும் விடுமுறையில் வீட்டில் பிள்ளைகளோடு நேரம் செலவளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஓய்வில்லாமல் வைத்தியசாலையில் உழைத்துக் கொண்டிருக்கும் என்னை நினைக்கையில் எனக்கே சலிப்பாக இருந்தது. இருப்பினும், நான் மட்டுல்ல வைத்தியத்துறையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் இப்படித்தானே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி மனதை திடப்படுத்திக் கொண்டு டவளையும் மாற்று ஆடைகளையும் எடுத்துக் கொண்டு கொரோணா யுனிட்டை நோக்கி வேகமாக நடந்தேன்.
அங்கே, மைக்ரோபயலாஜிஸ்ட் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தாதியர் இருவரும் சுகாதார ஊழியர்கள் இருவரும் உரிய ஆடைகளை அணிந்து தயார் நிலையில் இருந்தனர். நோயாளி வைத்திய சாலையை நெருங்கிக் கொண்டிருந்ததால் அவசரமாக தயாராக வேண்டியிருந்தது.ஆடை மாற்றும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே எனக்கான Personal Protective Equipment தயாராக இருந்தது. எனது ஆடைகளை கழட்டிவிட்டு தொற்று நீக்கிய சேட் மற்றும் ஜீன்ஸை அணிந்து கொண்டேன். அதற்கு மேலால் முழு உடலையும் மறைக்கக்கூடிய ரெயின் கோட் போன்ற மேலாடையையும் அணிய வேண்டும். அத்தோடு N - 95 மாஸ்க்கும் கண்களை மறைக்க Goggles உம் கைகளுக்கு இரண்டு சோடி கையுறைகளும், பூட்ஸ் உம் அணிய வேண்டும். இத்தனையையும் போட்டுக் கொண்ட உடனேயே வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. மூக்கு சற்று அரிக்கத் தொடங்கியது. மூச்சு விடுவது சற்று சிரமமாக இருந்தது.எவ்வாறு உள்ளே செல்வது, எப்படி நடந்து கொள்வது, என்பது பற்றி விளக்கமளித்த மைக்ரோ பயாலொஜிஸ்ட் , நோயாளியை பரிசோதித்தபின் நோயாளியின் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து சாம்பில்களை எடுக்குமாறும் கூறினார்;
சற்று நேரத்தில் அம்பியூலன்ஸ் வந்து சேர்ந்தது. மிகவும் பதற்றத்தோடு ஓர் இளைஞர் இறங்கி வந்தார், தாதியர் ஒருவரும் நானும் நோயாளியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைத்தோம். உள்ளே A/C Off செய்யப்பட்டிருந்ததனால் மிகவும் வெக்கையாக இருந்தது. நோயாளி நடந்து வந்த வழி நெடுகிலும் தொற்று நீக்கி மருந்துகளை தெளித்துக் கொண்டிருந்தார் சுகாதார ஊழியர் ஒருவர். அதன் நாற்றத்தால் வயிற்றை குமட்டிக் கொண்டு வந்தது. N - 95 மாஸ்க்கினூடாக மூச்சுவிடுவது சிரமமாக இருந்தது. இறுக்கிக் கட்டிய ஆடைகளினுள் வியர்த்துக் கொட்டியது. நோயாளியின் அருகில் சென்று தகவல்களை சேகரித்துக் கொண்டேன். கொரோணா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை நோ, தலைவலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் என்பனநோயாளியில் காணப்பட்டன. அத்தோடு இத்தாலியில் இருந்து வந்த Covid19 உறுதி செய்யப்பட்ட ஒரு நோயாளி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் வேலை செய்திருந்தார் இந்த நோயாளி. தகவல்களை சேகரித்த பின்னர் நோயாளியின் உடல் முழுவதையும் பரிசோதித்தேன், கொரோணா ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் நோயாளியை பரிசோதிப்பது எவ்வளவு risk என்று எமக்குத் தெரியும், ஆனால் அதை விட ஆபத்தான ஓர் வேலை பாக்கி யிருக்கிறது. அதுதான் பரிசோதனைக் காண சாம்பில் எடுப்பது . முனையில் பஞ்சு உள்ள குச்சிகளால் நோயாளியின் மூக்கினுள்ளும் தொண்டைக்குள்ளும் உள்ள திரவத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதன் போது நோயாளியின் வாய்க்கும் எமது முகத்திற்கும் இடையில் ஒரு சில இஞ்ச் இடை வெளிதான் இருக்கும். அது மட்டுமல்ல, நோயாளியின் தொண்டையை குச்சியால் தொடும் போது நோயாளி வேகமாக இருமக் கூடும். இத்தனை ஆபத்துகளையும் தாண்டி சாம்பில் களை எடுத்துக் கொண்டு வெளியேறினேன். பின்னர் கையுறைகளை கழட்டி விட்டு புதிய கையுறைகளை அணிந்து டிக்கட்டிலே விடயங்களை எழுதிவிட்டு வேறு வழியால் வெளியேற வேண்டும் - அங்கே மேலாடைகளை கழட்டி குப்பையில் போட்டுவிட்டு நேராக பாத்ரூமுக்குள் சென்று குளித்து விட்டு வெளியேற வேண்டும். வழமையாக காக்கா குளியல் குளிக்கும் எனக்கு 15 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் சோப் தேய்த்துக் குளித்தது சற்று வித்தியாசமாகவே இருந்தது.
நோயாளியை பார்த்து ஆரம்ப சிகிச்சைகளை ஆரம்பித்து விட்டோம் என்ற திருப்தி இருந்தாலும் இனி எப்போது எனக்கு காய்ச்சல் வரும், இருமல் வரும் என்ற ஒரு வகை அச்சத்திலேயே எதிர் வரும் 14 நாட்களை நாங்கள் கழிக்க வேண்டும், ஏனெனில் என்ன தான் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து சென்றாலும் அது 100% பாதுகாப்பை தர மாட்டாது என்பது எமக்குத் தெரியும். இருப்பினும் தொழில் தர்மம் எனும் அடிப்படையில் இந்த risk ஐ வைத்தியத்துறையில் உள்ள அனைவரும் எடுத்தே ஆக வேண்டும்,
அது மட்டுமல்ல, தொடர்ந்தும் இந்த கொரோணா தொற்று வேகமாக அதிகரித்துச் சென்றால் அதனை எதிர்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் எமது வைத்தியசாலைகளில் போதுமானதாக இல்லாத நிலையிலும் நாம் சேவையாற்ற தயார் நிலையில் உள்ளோம் என்பதனையும் இவ்விடத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.
இந்த அனுபவத்தை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள காரணம், நீங்கள் வைத்தியர்களை போற்றிப் புகழ வேண்டும் என்பதற்காக அல்ல.
மாறாக வைத்தியர்களையும் வைத்தியத்துறை சார்ந்தவர்களையும் சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக திட்டித் தீர்க்கின்ற இழி செயலை இனிமேலாவது மட்டக்களப்பு மக்கள் கைவிட வேண்டும் என்பதற்காகவே இதனை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஏனெனில் கொரோனா மட்டுமல்ல, இது போன்ற பல நூற்றுக்கணக்கான தொற்றுள்ள நோயாளிகளை தினமும் நாங்கள் சிகிச்சையளிக்கிறோம், நோயாளிகளின் மலசலங்களோடும், வாந்தி பேதிகளோடும், அழுகிப் போன புண்களில் இருந்து வடியும் சீழ்களோடும் எமது வாழ்க்கை பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது.
குறிப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா யுனிட்டில் மிகச்சிரத்தையோடு கடமையாற்றிக் கொண்டிருக்கும் தாதியர்கள், சிற்றூழியர்கள், ஏனைய ஊழியர்கள், ஏற்கனவே நோயாளிக ளுக்கு சிகிச்சையளித்த Dr. Vaithehi - Microbiologist,
Dr. Aathi
Dr. M. Ahilan VP
Dr. K. Arulmoly VP
Dr. M. Umakanth VP
Dr. Pavithra
மற்றும் இனிவரும் நாட்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவிருக்கும் அனைத்து வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்றேன். அத்தோடு இத்தகய ஆபத்தான கட்டங்களிலும் வைத்திய சேவையில் உள்ள அனைவருக்கும் என்றும் பக்கபலமாக இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறன்.
Dr. MSM . Nusair -
Registrar in Medicine
Teaching hospital_ Batticaloa .