பாராளுமன்றத் தேர்தலானது ஏப்ரல் மாத இறுதிவாரத்தில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சிகள் வேட்பாளர் தெரிவிலே மும்முரங்காட்டிக்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பிலே பிள்ளையானின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதையும் கூட்டமைப்பின் வாக்கு வங்கி பாரிய சரிவைக் கண்டிருப்பதனையும் யாராலும் மறுக்க முடியாது.
ஜனவரி மாதமளவில் பிள்ளையான் வெளியில் வரக்கூடிய சாத்தியம் உள்ளதனால் பிள்ளையானின் கட்சியின் வாக்கு வங்கி சடுதியான அதிகரிப்பையும் கூட்டமைப்பின் சரிவையும் காட்டும் என்பது உறுதி.
கூட்டமைப்பைப்பொறுத்தவரை கல்குடா தொகுதியில் தமிழரசுக் கட்சியின் செயலாளரான துரைராஜசிங்கத்தை களமிறக்கவும் யோகேஸ்வரனுக்கு இடம்கொடுப்பதில்லை எனும் நிலைப்பாடு உள்ளதனால் யோகேஸ்வரன் அணி கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட சில நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்குடா பிள்ளையானின் கோட்டை எனும் நிலையை இன்னும் வலுவடைய செய்யும்.
மட்டக்களப்பு தொகுதியில் பிள்ளையான் அணி பொதுவான மக்கள் செல்வாக்குள்ள சமூக சேவையாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
பட்டிருப்புத் தொகுதியைப் பொறுத்தவரை கூட்டமைப்பிலே ஜனா அவர்களும் அரியநேந்திரன் அவர்களும் களமிறங்கவுள்ளதாக தகவல். ஜனாவிற்கு பட்டிருப்புத் தொகுதியில் ஆதரவுத் தளம் உண்டு. அந்த ஆதரவுத் தளத்தினை இல்லாமல் செய்கின்ற நிலையினை கூட்டமைப்பினரே செய்ததை கடந்த காலங்களில் நாம் கண்டோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகவேண்டிய ஜனா அவர்கள் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களின் குழி பறிப்புக்களால் தோல்வியடைந்தார்.
ஜனாவுக்கு எதிராக கூட்டமைப்பே துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டது. ஜனாவை தோற்கடிக்கவேண்டும் என்பதில் முழு மூச்சாக ஈடுபட்டவர் அரியநேந்திரன் அவர்கள். நடைபெறவுள்ள தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதால் பல குழுி பறிப்புக்களை செய்வார்கள்.
இன்னொரு விடயம் பட்டிருப்புத் தொகுதியில் ஜனாவை வளர விடக்கூடாது என்பதில் தமிழரசுக் கட்சியினர் உறுதியாக இருக்கின்றனர். தனித் தமிழ் தொகுதியில் ரெலோவை வெல்ல விடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருத்தர் குறிப்பிட்டார்.
ஜனா அவர்கள் கூட்டமைப்பிலே இத் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி ஏற்படக்கூடிய சாத்தியமே அதிகமுள்ளது.
அண்மைக் காலத்தில் கூட்டமைப்பிற்கு எதிராக பல கருத்துக்களை ஜனா அவர்கள் தெரிவித்துவந்தவர். அதனால் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாவுக்கு எதிரான குழுக்களை எப்பவோ தோண்ட ஆரம்பித்துவிட்டனர். ஜனாவின் அரசியல் இருப்பு தொடருமா இல்லையா என்பது ஜனா அவர்கள் எடுக்கின்ற முடிவிலேயே உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலைவிட இத் தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட்டால் தனது இருப்பின் நிலை என்ன? அரசியலில் அடுத்த கட்ட நிலை என்ன? தன் இருப்பை தக்க வைக்க மாற்றுவழி என்ன என்பதை ஜனா அவர்கள் நன்கு திட்டமிட்டு செயற்படவேண்டும். சமூக சேவை நோக்கமுள்ள ஒருவர் அரசியலில் நிலைத்திருக்கவேண்டும் என்பதே எமது அவா.