சஜித் அணியிலிருந்து மனோ கணேசன் வெளியேற்றமா?



சஜித் பிரேமதாசாவின் அணியின் முஸ்லிம்கள் இருந்து தமிழ் பிரதேச கூட்டங்களைக்கூட தமிழ் அரசியல்வாதிகள் தலைமைதாங்க முடியவில்லை என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.










தேர்தல் பிரச்சாரத்தைக்கூட தலைமை தாங்க விடாதவர்கள் ஆட்சி அமைத்தபின் என்ன செய்வார்கள் எனும் கேள்வியை தொடுத்துள்ளார்.


முழு விபரம் இதோ அவரின் முகப்புத்தகத்திலிருந்து






<இந்த தேர்தலில் கிழக்கிலும், வடக்கிலும் நான் கண்ட சில யதார்த்தங்கள் (Home Truths)>




வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த விரிசலுக்கு நமது அரசு அணியில் இருக்கும் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகளும் காரணமாக அமைகின்றார்கள்.




இந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வவுனியா, மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் முழுமையாக கையில் எடுத்தமை பிழை. இது தமிழர்களுக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டதை நான் நேரடியாக பார்த்தேன். உண்மையில் இவற்றை தமிழர்களுடன் கூட்டு சேர்ந்து அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டும்.





நல்லவேளையில் மட்டக்களப்பு களுதாவளை கூட்டத்தை கணேசமூர்த்தியிடம் கொடுக்க நான் கொழும்பில் அழுத்தம் கொடுத்தேன். அதனால் அந்த கூட்ட பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு நான் முக்கிய உரையை ஆற்றினேன். இதனால் தமிழர்களின் பல சந்தேகங்களை தீர்க்க என்னால் முடிந்தது.




ஆனால், மன்னார் கூட்டத்தில் எங்கள் கட்சி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தியை அங்குள்ள ஒருசில பிரதேச மட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிரியாக பார்த்ததை நான் கண்கூடாக பார்த்தேன்.




இதன் பின்னணி என்னவென்றால், அங்கே சென்று சஜித் பிரேமதாசவை வெற்றியடைய செய்ய தமிழ் வாக்குகளை நாம் தேடுகிறோம். இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், தமிழ் பிரதேசங்களில் தமது அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக, தமிழ் விருப்பு வாக்குகளை தேடுகிறார்கள். இதுதான் அங்கு இந்த தேர்தல் பிரசாரத்தில் நடந்தது. இதை நான் நன்றாக புரிந்துகொண்டுள்ளேன்.




இந்த நிலைமைகளை இப்போது கோட்டாபய அணியில் உள்ள ஒருசில தமிழ் அரசியல்வாதிகள், முஸ்லிம் எதிர்ப்பை விதைத்து பயன்படுத்த முயல்கிறார்கள். இது இந்த மாவட்டங்களில் சஜித்துக்கு வருகின்ற தமிழ் வாக்குகளை குழப்பிவிடக்கூடாது. இதுவும் என் கவலை.




நீண்ட காலமாக போரினால் பலதையும் இழந்த தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். இன்று இவர்களுக்கு ஏனையவர்களை மேலதிக சலுகைகள், விசேட ஒதுக்கீடுகள் கிடைத்தால் கூட அதில் தப்பில்லை. ஏனென்றால் முப்பது வருட காலத்தில் கிடைக்காமல் போன நிலுவை இருக்கிறதே. இதுபற்றி நான் எனது மட்டக்களப்பு களுதாவளை கூட்டத்திலும் பேசினேன்.




இந்த தேர்தல் பிரசாரம் இப்போது முடிந்து விட்டது. இந்நிலையில் இதுபற்றி ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இதுபற்றி நான் கவனத்தில் கொண்டு தீர்வை தேடுவேன்.




Powered by Blogger.