ஊழல்வாதிகளுக்கு அமைச்சரவையில் இடமில்லை! ஜனாதிபதி அறிவிப்பு




நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி இருக்கும் எவருக்கும் அரசாங்கத்தில் பதவிகளை வழங்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நபர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஜனாதிபதியாக பணிகளை பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி செயலாளராக கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவை நியமித்தார்.

அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகலவை திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளராக நியமித்தார். ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்தார்.

அதேவேளை தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவராக புதிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மையில்லை என அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக களுவெவ குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதவிக்கு தகுதியான நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது நடந்து வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.