ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபாஜ வெல்வது உறுதி ரொய்டர் செய்திச்சேவை தகவல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரொய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றன. இந்த வார இறுதியில் ஒரு சகோதரர் ஜனாதிபதியாக கவனம் செலுத்துகின்ற நிலையில் மற்ற சகோதரர் அடுத்த வருட ஆரம்பத்தில் பிரதமராகுவதற்கு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற இரண்டு சகோதரர்கள் தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் அரசியல் மூலோபாயவாதிகளாக செயற்படுகின்ற நிலையில் அவர்களில் ஒருவர் நாடாளுமன்ற சபாநாயகராக மாறுவதற்கான தீர்மானத்தை பரிசீலித்து வருகிறார். குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் மூன்று ஆண்களும் அரசியலில் ஈடுபட எதிர்பார்த்திருப்பதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முறையான கருத்துக் கணிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச பின்னடைவில் உள்ள நிலையில் கோத்தபாய முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.


அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது கோத்தபாய விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.


போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோத்தபாய இலங்கையிலும் அமெரிக்காவிலும் வழக்குகளை எதிர்கொண்டார்.


இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் கருத்து கணிப்பில் முன்னிலை வகிக்கும் கோத்தபாய இந்த வார இறுதியில் ஜனாதிபதியாகுவதற்கு, அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகுவதற்கும், கோத்தபாய தலைமையிலான ஆட்சியில் சமல் ராஜபக்ச சபாநாயகராகுவதற்கும் எதிர்பார்ப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதற்கமைய இலங்கையில் மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக ரொய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.Powered by Blogger.