தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தாவிடின், அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தமாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கி வந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தை ரத்துச் செய்த சிறிலங்கா அதிபர், நேற்று முற்பகல் 9. 30 மணியளவில் வழமை போல, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தெரிவுக்குழு விவகாரத்தினால் பலத்த வாக்குவாதங்கள் நிகழக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் மிகுந்த அமைதியான முறையில், எந்த சர்ச்சையும் இன்றி நடந்து முடிந்ததாக அமைச்சர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்தை சிறிலங்கா அதிபர் கையில் எடுக்கவேயில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.