அரசுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!



அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்பட்டுவரும் சாகும்வரையான உண்ணாப் போராட்டம் இன்றும் முன்றாவது நாளாக தொடர்கிறது.







இந்த நிலையில், உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்டக்காரர்களின் உடல்நிலை மோசமாகிவருவதால் விளைவு மேலும் விபரீதமாகும் என்று அவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக தமது கோரிக்கைகளை சரியாக ஏற்றுகொண்டு அதற்குரிய தீர்வினைப் பெற்றுத்தர அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தாமதத்தினை ஏற்படுத்துவார்களாயின் பெரும் விளைவினை சந்திக்க நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த தேரரான சங்கைக்குரிய கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்தின தேரர் குறிப்பிடுகையில், “கல்முனை மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக பௌத்த மதகுரு என்ற வகையில் இப் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றேன். எமது கோரிக்கை நிறைவேறும்வரை நான் என் உயிரை கொடுத்தாவது பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு.” என்றார்.


கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் க.கு. சிவ சிறி சச்சிதானந்தம் சிவம் குருக்கள் குறிப்பிடுகையில், “நாங்கள் கல்முனை மக்களுக்காய் 2 வது நாளாய் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். நாளை மதியம் இரண்டு மணிக்குள் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்படாவிடில் இந்த அரசு பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும்” என பகிரங்கமாக எச்சரித்தார்.


கல்முனை மாநகரசபை உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் ராஜன் குறிப்பிடுகையில், ”எமக்கு முன்புள்ள சமூகம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி பல முன்னெடுப்புகளை முன்னெடுத்தார்கள். அவற்றிக்கு உரிய தீர்வுகளை அரசுகள் தட்டிக்கழித்தன. ஆனால் எமக்கு பிறகுள்ள சந்ததியும் கைகட்டி வாய்பொத்தி நிற்க வேண்டி ஏற்படுமெனில் எனது மரணத்தின் பின்கூட நடைபெற விடமாட்டேன்.” என ஆணித்தரமாக அரசுக்கு வலியுத்தினார்.


மேலும், கல்முனை மாநகரசபை உறுப்பினர் அழகக்கோன் விஜரெட்னம் கூறும்போது, ”எமது கல்முனை தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்காது என என் பிணத்தின் மீது அரசு கூறிச்செல்லட்டும்” என குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும் கல்முனைவாழ் தமிழ் மக்கள் தமது நியாயமான கோரிக்கையாக தமக்குரிய தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கூறிவருகின்றபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் உருப்படியான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.


குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளுடனான நல்லெண்ண முயற்சிகள் பாதிக்கப்படும் என்பதற்காக தமது நியாயமான உரிமையைக்கூட கூட்டமைப்பால் தற்துணிவுடன் நிறைவேற்றமுடியவில்லையே என கல்முனை மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.


இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே தடையாக இருந்துவருவதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ் லோகநாதன் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Powered by Blogger.