மைத்திரியின் விடாப்பிடி அரசியல்! மீண்டும் நெருக்கடி நிலைக்கான அறிகுறிகள்?






ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விடாப்பிடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் மீண்டுமொரு அரசியல் நெருக்கடிநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர், விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


எனினும், அத்தெரிவுக்குழுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவந்தன.





இந்நிலையில் தன்னை சிக்கலில் மாட்டிவிடுவதற்காகவே இத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டினார். தன்னை இலக்கு வைத்து காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.





இந்நிலையில், கடந்தவாரம் நடைபெற்ற திடீர் அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும், அதனை நிறுத்தும் வரை தான் அமைச்சரவைக் கூட்டத்திற்கு வரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.





அவரின் இக்கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தாலும் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.


தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தச் சொல்லும் அதிகாரத்தை ஜனாதிபதியால் எடுக்க முடியாது என்றும், விசாரணைகள் தொடரும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், தெரிவுக்குழுவின் உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் விளக்கினார்.





இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கான திகதி கூட அறிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சரவை செயலக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.





ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் தலைவராக செயற்படுகின்றாார். ஆனால் அவரும் இது தொடர்பில் எக்கருத்துக்களையும் தற்போதுவரை வெளியிடவில்லை. இதனால் மீண்டும்மொரு குழப்ப நிலை ஏற்பட்டிருக்கிறது.





இதேவேளை, ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழக்கமானது. ஆனால் நேற்றைய தினம் நடைபெறாமல் போனமையினால் அடுத்த கூட்டம் தொடர்பான எந்த முடிவும் தெரியவில்லை என்கின்றன ஜனாதிபதி செயலகத் தகவல்கள்.





ஜனாதிபதி மைத்திரியின் விடாப்பிடி அரசியல் செயற்பாடுகளால் நாட்டின் அபிவிருத்தியும் பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்திக்கின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் சூழலில் அமைச்சரவைக் கூட்டமும் நடத்தப்படாமல் இருப்பது நாட்டில் மீண்டுமொரு அரசியல் நெருக்கடியையும், அபிவிருத்தியையும் பாதிக்கும் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.





எவ்வாறாயினும், விசாரணைகள் நிறுத்தப்படும்வரை அமைச்சரவைக் கூட்டத்திற்கு தான் வரப்போவதில்லை என்று மைத்திரி எச்சரித்திருந்தாலும், நேற்றைய தினமும் வழமை போன்று விசாரணைகள் இடம்பெற்றதோடு பலர் சாட்சியங்களை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.