ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது பதவியை இராஜினாமா செய்து உடனடி ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை மீட்டுக்கொள்வதற்கான சிறந்த தலைவரை தெரிவுசெய்வதற்காக விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று மாலை நடைபெற்றது. ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பரில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இதுவரை உத்தியோக அறிவிப்பு வெளியாகவில்லை.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை அடுத்து ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்தப்படும் என்கிற குழப்பமான நிலைமையும் உருவாகியிருக்கிறது.
எவ்வாறாயினும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, அமைச்சரவையை கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி எவ்வாறு நாட்டை நிர்வாகத்திற்குள் நடத்திச்செல்வார் எனக் கேள்வி எழுப்பினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
”அமைச்சரவைக்கு வருகின்ற அமைச்சர்கள் அங்கே கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். அமைச்சரவையில் கவனத்தை செலுத்தாத அமைச்சர்களின் இந்த செயற்பாட்டினை தடுக்க முடியாத ஜனாதிபதி ஏன் அமைச்சரவைக்குள் தொலைபேசிகளை எடுத்துவர அனுமதி வழங்கினார்? மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவரை சந்திக்க அலரிமாளிகைக்குள் செல்லும்போது தொலைபேசியை எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டது.
நாட்டின் முக்கிய தீர்மானங்களை எடுக்கின்ற இடமான அமைச்சரவைக்குள் தொலைபேசி பாவனை தடுக்கப்பட வேண்டும். எனவே இதனைத்தடுக்க முடியாத ஒரு ஜனாதிபதியினால் நாட்டில் தீவிரவாதத்தை தடுத்துவிட முடியுமா? தப்பிச்செல்ல எந்த காரணங்களை அவர் கூறினாலும் அது தோல்வியில் முடிவடைகிறது. ஜனாதிபதி சரியாக தனது அதிகாரத்தை அமுல்படுத்தியிருந்தால் இந்த தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றிருக்காது. ஆட்சியையும் நிர்வாகத்தையும் சரியான வகையில் நடத்த முடியாமல் இருப்பின் சரியான ஒரு தலைவரை இந்த நாட்டிற்கு தெரிவாக வேண்டுமாயின் இப்போதே ஜனாதிபதி தனது பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல இடமளிப்பதே சரியாக முடிவாகும். இன்னும் எமது மக்கள் துன்பங்களை அனுபவிக்க இடமளிக்கக்கூடாது” என்று மேலும் கூறினார்.