புனித சிசிலியா கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவு விழா இன்று வெகு விமர்சையாக இடம் பெற்றது!!

150 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று இன்று அதன் நிறைவு விழாவும் 150 வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் வெளியீடும் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை தனது 150ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடாத்தியது. இதன் ஆரம்ப நிகழ்வானது கடந்த (25) திகதி மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இருந்து விழிப்புணர்வு நடைபவனியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (26) திகதி பல்வேறு கலை கலாசார திகழ்வுகள் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றதுடன், இன்றைய தினம் (27) திகதி 150 வது ஆண்டு நிறைவு தின விழாவின் இறுதி நிகழ்வு  இடம்பெற்றதுடன், 150 ஆண்டு நிறைவினை முன்னிட்டு "Shine Cecilia's Light" எனும் சிறப்பு நூல் கல்லூரியின் முதல்வரினால் வெளியிட்டுவைக்க்கப்பட்டது.

பண்ட் வாத்தியம் இசையுடன் அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் 150 வது ஆண்டு நினைவாக வடிவமைக்கப்பட்ட கொடி என்பன ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பாடசாலை கீதத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வரின் தலைமையுரை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்ததுடன், பாடசாலையின் வளா்ச்சிக்காக அளப்பரிய சேவையாற்றிய கல்லூரியின் முன்னால் அதிபர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், கல்லூரியில் கடமையாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்லூரியின் பணியாளர்கள் என பலர் இதன் போது அதிதிகளால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.அகஸ்டின் நவரெட்ணம் அடிகளார் கலந்து கொண்டு  ஆசிச்செய்தியினை வழங்கியிருந்தார், மேலும் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் மாகாண மேலாளர் (Puperior) அருட்சகோதரி நிலாந்தி அவர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் முன்னாள்  மாகாண மேலாளர் அருட்சகோதரி மேரி லூர்துஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார். 

இந்நிகழ்வுகளில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகர் கலாநிதி டபிள்யூ.ஜே.ஜெயராஜ் கலந்து கொண்டதுடன் நூல் தொடர்பான நயவுரையினை ஆற்றியதுடன், கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






























Powered by Blogger.