மட்டக்களப்பில் மாபெரும் கண்காட்சி!!

மட்டக்களப்பில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 17.07.2025 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக இடம் பெறும் batticaloa Expo 2025 கண்காட்சியானது 17.07.2025 அன்று முதல் 20.07.2025 வரையான நான்கு நாட்கள் இடம்பெறுவதுடன், இதில் தொழில் சார் கண்காட்சி மட்டுமல்லாது சிறுவர்களுக்கான mega carnival உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

நிர்மாணம், தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளுக்கிடையிலான தொடர்புகளை மாவட்டத்தில் வலுப்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த ஆண்டு பாரம்பரிய கண்காட்சியாக குறித்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கும் இக் கண்காட்சியானது சந்தர்ப்பமாக அமையுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் 175 இற்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி தொழில் நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர்களினால் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சி ஊக்குவிக்கபடுவதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

நிர்மாணம், உள்ளமைப்பு, இயந்திரங்கள், வேளாண்மை சார்ந்த தயாரிப்புகள், பதப்படுத்தல் மின் மற்றும் மின் உபகரணங்கள், கைத்தொழில் பொருட்கள், சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள், கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதார உபகரணங்கள், உணவு மற்றும் பானங்கள், பரிசுப் பொருட்கள், துணி, கருவி உபகரணங்கள் மற்றும் பல துறைகளுக்கான தயாரிப்புகளும் சேவைகளும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Tima international (Pvt) Ltd மற்றும் Event Max Exhibitions ஆகியவவை இணைந்து ஒழுங்குபடுத்திய இக்கண்காட்சி நிகழ்விற்கு மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், Ceylon institute of Builders (CIOB), EDB மற்றும் கிழக்கு மாகாண வர்த்தக சங்கங்கள் ஆதரவு வழங்குகின்றன.

குறித்த வர்த்தக கண்காட்சி நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் லீலாரத்தின, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், மாநகர ஆணையாளர் என்.தனஞ்சயன், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, Event Max Exhibitions நிறுவனத்தின் முகாமையாளர் பிரசாத் பெரேரா, மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன பிரதிநிதிகள், தொழில் வல்லுநர்கள், மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளன பிரதிநிதி எனப் பலர் கலந்துகொண்டனர்.














.


Powered by Blogger.