முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு கருங்கல்லினால் மட்டக்களப்பில் பாரியதொரு திருவுருவச் சிலை நிறுவப்பட வேண்டும் எனும் கனவை கொண்டிருந்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவருமாகிய தேசபந்து முத்துகுமார் செல்வராசா அவர்களின் கனவானது குறிகிய காலத்திற்குள் நனவாகியுள்ளதுடன் நாளைய தினம் திறப்பு விழாவானது மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
சுவாமி விபுலானந்த அடிகளாரி துறவற நூற்றாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு - சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் முன்னால் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமாகிய க.பாஸ்கரன் தலைமையில் கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் நிர்மானிக்கப்பட்டுள்ள 15 அடி உயரமான சுவாமிகளின் திருவுருவக் கற்சிலையானது நாளை 17ஆம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது
இதன் போது இந்தியாவின் மாமல்ல புரத்தில் சிறந்த சிற்பிகளினால் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு அருகாமையில் வடிவமைக்கப்பட்டுள்ள யாழ் நூல், மகர யாழ் என்பன திறந்து வைக்கப்படவுள்ளதுடன், ஆய்வுக் கட்டுரை புத்தகம், சிறப்பு மலர் வெளியீடு என்னும் இரண்டு மலர்கள் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன்,
"தமிழ் மறை ஞானி சுவாமி விபுலானந்தரின் தனித்துவம்" எனும் தொனிப்பொருளில் பன்னாட்டு ஆய்வரங்கம் மறுநாள் (18) திகதி ஈஸ்ட் லகூன் லோட்டஸ் மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
குறித்த ஆய்வரங்கிற்காக இந்தியாவில் இருந்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் அடங்குவதுடன், பல நாடுகளில் இருந்து பேராசிரியர்கள், கவிஞர்கள் வருகை தரவுள்ளதுடன் சிறப்பு சொற்பொழிவுகளையும் ஆற்றவுள்ளனர்.
கனடா சுவாமி விபுலானந்தர் கலா மன்றம் உள்ளிட்ட 33 கொடையாளிகளின் நிதிப் பங்களிப்புடன் தனிக் கருங்கல்லினால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கு அதிகமான செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள சுவாமிகளின் திருவுருவச் சிலையினை ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ஆகியோர் இணைந்து திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.