நேற்றைய தினம் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலின் கிழக்குப் பக்கமாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25.11.2024) காலை (08.30 மணிக்கு) தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய கடல் பகுதிக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக (Depression) வலுவடைந்து காணப்படுகின்றது.
இது தற்போது மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக 500km தூரத்திலும்,
திருகோணமலையிலிருந்து தென்கிழக்காக 600km தூரத்திலும்,
நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்காக 880km தூரத்திலும்,
புதுச்சேரியிலிருந்து தென்கிழக்காக 980km தூரத்திலும்,
சென்னையில் இருந்து தெற்கு-தென் கிழக்காக 1050km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இது அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடையும்.
அதன்பின்னர் இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அதனை அடுத்து வரும் இரண்டு நாட்களில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் கரையோரமாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.