அறுகம்பை பகுதிக்கான பயணக் கட்டுப்பாட்டை நீக்கிய அமெரிக்கா - வெளி விவகார அமைச்சின் கோரிக்கையை பரிசீலித்த பின் நடவடிக்கை
கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி அறுகம்பை பகுதிக்கு வழங்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நீக்கியுள்ளது.
அனைத்து அமெரிக்க பிரஜைகளையும் இலங்கைக்கான பயண ஆலோசனை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி அறிவித்தலொன்றை விடுத்திருந்தது.
இது தொடர்பில் ஏற்கனவே அறுகம்பையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுதியிருந்த பாதுகாப்பு அமைச்சு குறித்த விடயத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்திருந்தது.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் முப்படையினர் மற்றும் பொலிஸார் தமது கடமைகளை சரியாக முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த பகுதிக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இது பற்றி ஆராய கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா குறித்த பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த பயணக் கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையின் வெளி விவகார அமைச்சு நேற்று (12) கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறித்த பயணக் கட்டுப்பாட்டை நீக்குவதாக இன்று (13) அறிவித்துள்ளது.