மட்டு. வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த விவசாயியான 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சம்பவதினமான இன்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக் காக வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே வேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தார்.