எம்மிடம் ஆட்சியதிகாரம் கையளிக்கப்படும் போது மக்களுக்கு வினைத்திறனான சேவையை ஆற்ற உறுதி பூண்டுள்ளோம் - மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன் தெரிவிப்பு!
நாங்கள் தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூலம் 5 ஆண்டு காலம் மிகத் திறமையாக மாநகர மக்களுக்காகப் பணிபுரிந்துள்ளதாக முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமக்கான ஆதரவை மக்கள் வழங்க வேண்டுமெனக் கோரி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வூடகச் சந்திப்பு கல்லடியிலுள்ள அவரது உத்தியயோகபூர்வ அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,
இக்காலப் பகுதியில் மட்டக்களப்பு மாநகர மக்களுக்கு வினைத்திறனும், விளைதிறனுமான சேவைகளை வழங்கியிருந்தோம்.
இதன்போது 500 க்கும் அதிகமான வீதிகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு தேவையான வடிகான்களும் தூர்வாரப்பட்டுள்ளது.
உலகில் அதாவது தெற்காசியாவில் அதிலும் குறிப்பாக இலங்கையின் மட்டக்களப்பு மாநகரில் சிறுவர் சினேகபூர்வ நகர அபிவிருத்திச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தி, அதில் நாம் வெற்றியடைந்திருந்தோம்.
இதன் மூலமாக எமது செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது. இதன்போது சிறப்பாகச் செயற்பட்ட 5 மாநகர முதல்வர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதில் ஒருவராக நானும் தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.
இவ்வாறு நான் தெரிவு செய்யப்பட்டமையானது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கை முழுவதற்கும் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாநகர சபையில் எமது ஆட்சிக் காலத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியிருந்தோம். குறிப்பாக அரசாங்க நிதியை அல்லது மாநகர மக்களின் வரிப்பணத்தை மட்டும் நம்பியிருக்காமல் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களோடு நாம் சேர்ந்து செயற்பட்டு பல்வேறு செயற்றிட்டங்களை முழுமை பெறச் செய்துள்ளோம்.
இதன்போது எம்மோடு யுனிசெப், யு.என்.டி.பி மற்றும் ஏசியா பவுண்டேசன் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து 5 வருடங்கள் பணியாற்றியிருந்தன. இதன் மூலம் எம்மால் மக்களுக்கான பல்வேறு செயற்றிட்டங்கள் முழுமைபடுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் நகரில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மட்டக்களப்பு மாநகரசபை ஊடாக வெள்ளம் வழிந்தோடுவதற்கான செயற்றிட்டங்களை உடனுக்குடன் களத்தில் நின்று அமுல்படுத்தியிருந்தோம்.
இவ்வாறான நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கொவிட் - 19 தொற்று காலத்தில் மட்டக்களப்பு மாநகருக்குள் எந்தவிதமான பிரச்சினைகளும் வராமல் நாங்கள் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று சேவையாற்றியுள்ளது கண்கூடு.
அதேபோன்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் உடனடியாகக் களத்தில் நின்று எமது மக்கள் பாதிக்கப்படாத வகையில் பல்வேறு செயற்பாடுகளை மக்கள் நலன் சார்ந்து மேற்கொண்டிருந்தோம். அதுமட்டுமன்றி இனமுரண்பாடுகள் ஏற்படாமலும் எமது மக்களைப் பாதுகாத்திருந்தோம்.
இதன் மூலமாக மட்டக்களப்பு மாநகருக்குள் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாத வண்ணம் நாங்கள் தொடர்ச்சியாக நின்று மக்களுக்குப் பணியாற்றியிருந்தோம்.