கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாமானது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியிருந்தனர்.
வருடாவருடம் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை கட்சியினால் இரத்ததான முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் செயற்பாடுகளுக்கு பெரும் உதவியாக இருப்பதோடு, வைத்தியசாலையின் குருதி தட்டுப்பாடும் தவிர்க்கப்பட்டு வருகின்றது.
மேலும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததோடு, “பசுமையான சூழல்” எனும் தொனிப் பொருளில் கீழ் ஆயிரம் பயன் தரும் மரங்கள் நடும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.