கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை!!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று (17) வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை சிவ ஸ்ரீ  நிஜோத் குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக சிறப்பாக இடம்பெற்றது. 

மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் பெயர் கொண்ட உலகமெல்லாம் இரட்சத்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள்பாலித்துவருகின்ற அம்பாளின் வரலட்சுமி பூஜை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்கள் மஞ்சள் நிற கலாச்சார ஆடை அணிந்து  திருவிளக்குப் பூஜையில் ஈடுபட்டனர். 

வரலட்சுமி விரதம் சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பிருந்து காப்பு கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்வது வழக்கம்.  

இதேவேளை வசந்த மண்டபத்தில் விசேட பூஜையில் வேத, மேள வாத்தியங்கள், நாதங்கள் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் அம்மனுக்கு தீபாராதனைகள்  நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட மரியாம்மாள் உள்வீதி வலம்வரும் போது ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு பெண்கள் தீபங்களை எடுத்து அம்மாளுடன் வலம் வருவது  சிறப்பு அம்சமாகும்.











Powered by Blogger.