பாசிக்குடா “புளு பிளேக் பீச்" வேலைத் திட்டம் தொடர்பான கடற்கரை முகாமைத்துவக் குழுவின் கலந்துரையாடல்!!


பாசிக்குடா “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)”  வேலைத் திட்டம் தொடர்பான  மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று (27) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக  இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வு கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது  குறித்த திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சது விக்ரமசிங்க “புளு பிளேக் பீச்” வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.  

சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையில்  மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்திற்காக உணவட்டுன, பெந்தோட்டை, அருகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய நான்கு கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி ஆசிபா பாசிக்குடாக் கடற்கரையை குறித்த “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)”  ஆக தரமுயர்த்துவதற்காக முன்னெடுக்கப்டவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தினார்.

“புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” தரச் சான்றிதழ் டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள சுற்றாடல் கல்விக்கான மன்றம் (FEE) எனும் சர்வதேச நிறுவனத்தினால் சுற்றாடல் கல்வி மற்றும் தகவல், தரமான நீர், சுற்றாடல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் சேவை ஆகிய பிரதான நான்கு காரணிகளுடன் காணப்படும் கடற்கரைகளுக்கு வழங்கப்படுகின்றது.

இதற்காக பாசிக்குடாக் கடற்கரையில் தகவல் நிலையம் அமைத்தல், அறிவித்தல் பலகைகளைப் பொருத்துதல், கடற்கரைப் பயனாளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல், கடற்கரை நீரின் தரம் தொடர்பாக டிஜிடல் அறிவித்தல் பலகை அமைத்தல், சுகாதார வசதிகள், கழிவகற்றல் சேவைகளை பராமரித்தலும் தராமானதாகப் பேணுதலும் மற்றும்  மீள்சுழற்சிக் கழிவுகளை சேகரித்தலும் அதனை ஒப்படைத்தலும்,  போன்ற  செயற்பாடுகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, கல்குடா பிரதேச சபை ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலன், சுற்றுலாத்துறை அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகாநந்தராஜ், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உதவி முகாமையாளர் சிவகுமார், கல்குடா பிரதேச சபையின் செயலாளர் எஸ். நவநீதன் உட்பட இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் அரச திணைக்களங்கள் பலவற்றின் அதிகாரிகள் எனப் பலரும்  கலந்து கொண்டனர்.Powered by Blogger.