ஆயித்தியமலை சதாசகாயமாதா ஆலய திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்!!


வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா  திருத்தலத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு  மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை  தலைமையில் சார்ஸ் மண்டபத்தில் இன்று (18) திகதி இடம் பெற்றது.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல்  செப்டம்பர்  03 ஆம் திகதி வரை ஆயித்தியமலை  புனித சதாசகாயமாதா திருத்தலத்தின் திருவிழா இடம்பெறவுள்ளதனால்   விழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

பெருவிழா கூட்டுத் திருப்பலியினை  திருத்தந்தையின் இலங்கைக்கான  பிரதிநிதி பிறையன் உடைக்வே மற்றும்  மறை மாவட்ட ஆயர் அகியோரினால் இணைந்து ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், முதல் திருப்பலியானது காலை 5.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.

திருவிழாவிற்கான பாதயாத்திரை எதிர்வரும் செப்டெம்பர்  09 திகதி காலை 5 மணிக்கு புளியந்தீவு  புனித மரியாள் பேராலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து வவுணதீவினுடாகவும் மற்றும் செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5 மணி திருப்பலியைத் தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் திருத்தலம் சென்றடையவுள்ளது.   

இதன் போது திருவிழாவிற்கான போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் மற்றும் பாதுகாப்பு, மின்சாரம் வழங்கள் போன்ற விடங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வின் போது  புனித  சதாசகாய மாதா திருத்தல நிருவாகி  ஈ.ஜேமில்ட்டன், உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன், மண்முனை மேற்கு  பிரதேச செயளாலர் எஸ்.சுதாகரன், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  திருமதி.சந்துதி பின்டோம மற்றும் பொலிசார், கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சுகாதார அதிகாரிகள், மற்றும் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.


Powered by Blogger.