இரத்த தானம் வழங்கும் நிறுவனங்களுக்கு NBTS இனால் சான்றிதழ் வழங்கி வைப்பு!!


காத்தான்குடியில்  இரத்ததான நிகழ்வுகளை நடாத்தி வரும் சிவில் சமூக அமைப்புக்கள், பொது நிறுவனங்களுக்கு தேசிய இரத்தமாற்று சேவையின் தலைமையகத்தினால் (NBTS) வழங்கப்பட்ட சான்றிதழ்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், இவ்வைத்தியசாலை ஊூடாக இரத்தான நிகழ்வுகளை நடாத்திவரும் 12 அமைப்புக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் செயற்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் இரத்ததான முகாம்களை நடாத்துவது சம்பந்தமாகவும், இம்முகாம்களை நடாத்தும் அமைப்பினருக்கான முன்னாயத்த உளவள ஆலோசனைகளும் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரியும் சம்மேளனத்தின் தலைவருமான டாக்டர் திருமதி அலீமா அப்துர் ரஹ்மானினால் வழங்கப்பட்டது. 

இதுதவிர வருகைதந்திருந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், குருதிக் கொடையாளர் சம்மேளன செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் விழிப்பூட்டல்களும் மேற்கொள்ளப்ட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதிக் கொடையாளர் சம்மேளனத்தின் செயலாளர், பொருளாளர், அதன் பிரதி நிதிகள், காத்தான்குடியில்  இரத்ததான நிகழ்வுகளை நடாத்தி வரும் சிவில் சமூக அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.Powered by Blogger.