நெல்லிற்கு நிர்ணய விலை வேண்டும் - ஜனாதிபதி செயலகம் சென்ற மட்டக்களப்பு விவசாயிகள்!!


சிறு போக நெல் அறுவடை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தமது நொல்லிற்கான நியாயமான நிர்ணய விலையினை பெற்றுத்தருமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் ஜனாதிபதி செயலகம் சென்று ஜனாதிபதி செயலக  உயரதிகாரிகளுடன் விசேட  கலந்துரையாடலொன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) திகதி  இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் பாலித்த விக்கிரமகே மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் (உணவு பாதுகாப்பு) கலாநிதி வீ.எம்.எஸ்.வட்டகொட உள்ளிட்ட ஜனாதிபதி செயலக துறைசார் உயர் அதிகாரிகளுடன் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் செயலாளருமாகிய அருளானந்தராஜா ரமேஸ் உள்ளிட்ட மேலும் பல விவசாய பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். 

இதன்போது தாம் ஏதிர்நோக்கி வரும் பாரிய பிரச்சனையாகவுள்ள நெல்லிற்கான நிர்ணய விலை தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதுடன், தமக்கான உற்பத்தி செலவு தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கு விவசாயிகளினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் அனைத்து விடையங்களையும் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி செயலக அதிகாரிகள், நெல்லின் விலையினை 95 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை நெற்கொள்வனவு சபை ஊடாக தாம் மேற்கொள்வதாக வாக்குறுதியளித்ததுடன், விவசாயிகள் அறுவடை செய்த நெற்களை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு தேவையான பணத்தினை பெற்றுக்கொள்ள அரச வங்கிகள் ஊடாக இலகு வங்கி கடன்களை பெற்றுக்கொள்ள வங்கிகள் ஊடாக தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விவசாயிகளிடம் தெரிவித்ததாக விவசாயிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அதே வேளை மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தில் நேற்றைய தினம் புதிதாக பதவியேற்ற பணிப்பாளர் நாயகத்தினை சந்திந்து வாழ்துக்களை பரிமாரியதுடன், எதிர்வரும் அறுவடை விழாவிற்கு மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பணிப்பாளர் நாயகத்தினை விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.