புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் 107 ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!


மட்டக்களப்பு மறை மாவட்ட பாதுகாவலராம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் 107 ஆவது வருடாந்த திருவிழா எதிர்வரும் 28.07.2023 ஆந் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி டச்பார்  புனித  இஞ்ஞாசியார்  ஆலயமானது 1916ம் ஆண்டு அருட்பணி செபஸ்தியான் லாசராஸ் அடிகளாரினால் சிறு ஓலைக் குடிலாக கட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயமானது 1923ம் ஆண்டிலிருந்து புளியடிகுடா பங்கில் வாழ்ந்துவந்த இயேசுசபைத் துறவியான அருட்பணி ஹெப்பெனோ அடிகளாரினால் பராமரிக்கப்பட்டுவந்தது. அக்காலப் பகுதியில் குறைந்தளவான கத்தோலிக்க குடும்பங்களே அங்கு வசித்து வந்தனர்.

அருட்தந்தை ஹெப்பெனோ அடிகளாரை தொடர்ந்து அருட்தந்தை பீலிக்ஸ் கிலாக்சன் அடிகளாரின் பராமரிப்பில் இவ்வாலயம் காணப்பட்டது. அருட்தந்தை பீலிக்ஸ் கிலாக்சன் அடிகளார் ஓலைக் குடிசையாக இருந்த இன்னாசியார் ஆலயத்தினை 1952ம் ஆண்டு கல்லினால் கட்டி கூரை போட்டு மெருகூட்டினார். இவ்வேளையில் 25.10.1952ல் மதிப்பிற்குரிய ஆயர் இக்னேசியஸ் கிளேனி அவர்கள் மறை மாவட்டத்தின் பங்குகளின் எல்லைகளை தீர்மானித்துப் புதிய பங்குகள் உருவாக்கப்பட்ட வேளையில் இஞ்ஞாசியார் ஆலயமானது புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஒரு பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் 1960களில் இப்பகுதியினை நோக்கி மக்கள் குடியேறத் தொடங்கினர். கத்தோலிக்க மக்களும் பறந்கி இனத்தவரும் கனிசமான அளவு சென்று குடியேறினர். இவ்வாறு அதிகரித்த தொகையினராக கத்தோலிக்க மக்கள் வாழ்ந்து வந்த வேளையில் 1978ம் ஆன்னு நவம்பர் மாதம் அடித்த சூராவளியினாலும் வெள்ளப் பெருக்கினாலும் இப்பகுதி வாழ் மக்களும் அவர்களுடைய வதிவிடங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இஞ்ஞாசியார் ஆலயமும் தரைமட்டமாகியது. அக்காலப் பகுதியில் பங்குத்தந்தையாக விளங்கிய அருட்பணி எப்.எக்ஸ்.மேயர் அடிகளார் புதியதோர் ஆலயத்தை அமைத்தார். அதன்பின்னரான காலப்பகுதியில்  இப்பகுதியில் கத்தோலிக்க மக்களின் தொகை கணிசமான அளவு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் இவ்வாலயத்தில் திருப்பலி வேளைகளில் அனைத்து மக்களையும் உள்ளடக்க போதாமல் இருந்தது.

இதனால் 1992ம் ஆண்டளவில் அக்காலப்பகுதியில் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி யோசப்மேரி அடிகளாரின் முயற்சியினால் புதிய ஆலயம் அமைக்கும் பணிகள் 1992ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் அப்போதைய ஆயர் அதி வந்தனைக்குரிய கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வாலய நிர்மாணப் பணிகளில் அப்போது துணைப் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ஜோயல் அடிகளாரின் பங்கு கணிசமானது ஆகும்.

பின்னர் 2000.01.17ம் திகதி ஆயர் அவர்களினால் கல்லடி – டச்பார் ஒரு தனிப் பங்காகவும் இயேசு சபையினரின் பராமரிப்பிற்கு உட்பட்டதாகவும் பிரகடணம் செய்யப்பட்டது. அதன் பின்னர் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி யோசப்மேரி அடிகளார் நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து துணைப் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ரீ.ஜீவராஜ் அடிகளார் 06.08.2012ம் ஆண்டு முதல் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார். இவரினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த ஆலய நூற்றாண்டு அபிவிருத்திப் பணிகளை முழு மூச்சுடன் செயற்படுத்தி சில திட்டங்களை பூர்த்தி செய்தார். அவரைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு ஆவணி மாதமளவில் புதிய பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்ட அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரும் நூற்றாண்டினை முன்னோக்கியதாக பல திட்டங்களை வகுத்து செயல்படுத்திக்கொண்டு வந்தார்.

இவரைத் தொடர்ந்து 2016 ஜனவரியில் புதிதாக பணிபுரிய வருகைதந்த அருட்பணி சுவக்கின் றொசான் அட்களார் பங்குச் சபையினருடனும் பங்கு மக்களுடனும் இணைந்து 2016 ஆம் ஆண்டு ஆலய நூற்றாண்டினை வெகு விமரிசையாக ஆன்மீக ரீதியாக கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அருட்பணி சுவக்கின் றொசான் அட்களார் இறுதி உருவாக்கல் பயிற்சிக்காக பங்கிலிருந்து விடைபெற்றுச் சென்றபோது, 2021 ஆண்டு சித்திரை மாதம் மீண்டுமாக பங்கினை அருட்தந்தை லோறன் லோகநாதன் அடிகளார் பொறுப்போற்று  கொவிட் சூழலிலும் பங்கு மக்களை தொடர்ச்சியாக ஆன்மீக வழியில்  வழிநடாத்தி வருகின்றார்.

ஆலயத்தின் 107 ஆவது வருடாந்த திருவிழாவானது இவ்வாண்டும் சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில் கடந்த (28) திகதி வெள்ளிக்கிழமை  மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும், பிரார்த்தனையும் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி லோறன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றப்பட்டு, திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து நவநாட் காலங்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும், பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளதுடன், 05.08.2023 திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், அத்திருப்பலியில் முதல் நன்மை, உறுதிப்பூசுதல் ஆகிய அருளடையாளங்கள் வழங்கப்படவுள்ளதுடன், குறித்த தினத்தன்று மாலை 5.00 மணிக்கு புனிதரின் திருவுருவப் பவனி வழமையான வீதிகளினூடாக வலம் வந்து மீண்டுமாக ஆலயத்தை வந்தடைந்ததும் நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் 06.08.2023 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியானது இயேசு சபை துறவி அருட்பணி அன்ரனி றொபட் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், பெருவிழா சிறப்பு நிகழ்வாக குறித்த தினத்தன்று மாலை 3.30 மணிக்கு ஆலய முன்றலில் பங்குப் பேரவையின் தலைமையில் கலைநிகழ்ச்சிகளும், டொம்போலா நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

நவநாட்காலங்களில் அருட்தந்தையர்களான ஜீ.மகிமைதாஸ் (CRS) எஸ்.றொஷான் (SJ), ஜெரிஸ்டன் வின்சன்ட், ஐ.ஜெமிஸ்டன், ஏ.ஏ.நவரட்ணம் (நவாஜி),  எம்.ஸ்ரனிஸ்லோஸ், பீ.ஜீவராஜ், எட்வட் செல்வராஜ் மற்றும் அருட்தந்தை அன்ரனி றொபட் (SJ) ஆகியோர் அருளுரையாளர்களாக பங்கேற்று திருப்பலியினையும் ஒப்புக்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.