60 வகையான மருந்துகளின் விலை குறைப்பு!!


60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் கீழ் நிறுவப்பட்ட தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், மருந்து விலை நிர்ணயம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பாகும்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானித்ததாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

உரிய அதிகாரிகளுடனான விரிவான கலந்துரையாடலின் பின்னர் விலைக் கட்டுப்பாட்டினால் கட்டுப்படுத்தப்படும் NMRA மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விலை மாற்றம் மூன்று மாதங்களுக்கு பொருந்தும். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, கடந்த வருடம் முதல் பல சந்தர்ப்பங்களில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 97 வீதம் வரை அதிகரிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரப்படுத்தல் வேலைத்திட்டத்தின் விளைவாக அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பலனை அனைத்து பிரஜைகளும் அனுபவிக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Powered by Blogger.