சாய்ந்தமருதில் பாமஸிகளின் தரம் மற்றும் சேவை தொடர்பில் ஆராய சுகாதாரத்துறை திடீர் பரிசோதனை நடவடிக்கை!!
(நூருல் ஹுதா உமர்)
சாய்ந்தமருது மருந்தகங்கள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், மருத்துவ நிலையங்களின் தரம் மற்றும் சேவை தொடர்பில் ஆராயும் திடீர் பரிசோதனை நடவடிக்கையொன்று இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய மருந்தகங்கள் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட இந்த வேலைத்திட்டத்தில் வியாபார உத்தரவு பத்திரமில்லாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டமை, மருந்தாளருக்கான தகமை சான்றிதழ் இல்லாமை, போதியளவில் மருந்துகளை தேக்கிவைக்க பொருத்தமான களஞ்சிய வசதியின்மை, பொருத்தமான வெப்பநிலை பேணப்படாமை, காலாவதியான மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டமை போன்ற பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க தேவையான விடயங்களை முன்னெடுத்துள்ளதாகவும், சிலருக்கு குறைபாடுகளை நிவர்த்திக்க கால அவகாசங்கள் வழங்கியுள்ளதாகவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் இதன்போது தெரிவித்தார்.
இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர்களான எம்.என்.எம். பைலான், ஏ.எல்.எம். அஸ்லம் ஆகியோர் கலந்து கொண்டு மருந்தகங்கள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், மருத்துவ நிலையங்களின் தரம் மற்றும் சேவை தொடர்பில் ஆராந்தனர். குறித்த கால அவகாசத்தில் குறைகளை நிவர்த்திக்க தவறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.