மட்டக்களப்பில் யூனியன் வங்கி கிளையில் தீ விபத்து; மின்சாரக் கோளாறே காரணம் என பொலிஸ் தகவல்!!
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள யூனியன் வங்கியின் கிளை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (30) திகதி காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில் வங்கியின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து உடனடியாக தகவல் அறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மின்சாரக் கோளாறு அல்லது மின்சாரக் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், தீ விபத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிசாரினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தச் சம்பவத்தால் உயிர்ச் சேதம் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்பட்ட சொத்துச் சேதத்தின் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
