மட்டக்களப்பில் நூறு வயதைத் தாண்டிய திருமதி சிவகங்கை சண்முகராஜா உள்ளிட்ட 30 பேர் "அன்னையர் திலகம்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு நேற்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோதே இவ்வாறு கௌரவிக்கப்பட்டாரகள்.
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர் பிறேமானந்தன், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமாகிய தேசிய ஜோதி உ.உதயகாந்த், சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா, செங்கதிரோன் தே. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், அன்னையர்களுக்கான கௌரவத்தினையும் வழங்கியிருந்தனர்.
பாராட்டப்பட்ட 30 அன்னையர்களுள் 100 வயதை தாண்டிய மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த திருமதி சிவகங்கை சண்முகராசா முடிசூட்டி கிரீடம் அணிவித்து பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேபோல் பிரபல கவிஞர் காசி ஆனந்தனின் சகோதரி 95 வயதுடைய அமிர்தகழியைச் சேர்ந்த திருமதி சிவபாக்கியம் இராசையா முதலி மற்றும் கொக்கட்டிச்சோலை முன்னாள் பிரதேச சபைத் தவிசாளரும் அதிபருமான சிவஞானம் அகிலேஸ்வரனின் தாயார் 91 வயதுடைய மட்டக்களப்பில் வாழும் திருமதி மங்களேஸ்வரி சிவஞானம், ஓய்வுநிலை அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ், சைவபுலவர் திருமதி சிவானந்த ஜோதி ஞானசூரியம் உள்ளிட்ட முப்பது பேருக்கு பொன்னாடை போர்த்தி "அன்னையர் திலகம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கதிரவன் கலைக் கழகம் " அம்மா" எனும் தலைப்பில் நடாத்திய இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டிய 53 மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஓட்டமாவடியைச் சேர்ந்த திருமதி பௌசியா முகமட் கலீல் எனும் அன்னை அருமையானதொரு பாடலை மேடையில் பாடினார்.
புதுக்குடியிருப்பில் அந்த நாட்களில் வீட்டில் 200 குழந்தைகள் பெற பிரசவம் பார்த்த திருமதி சின்னப்பிள்ளையும் பாராட்டப்பட்டார். தாய்மையின் மகத்துவத்தைப் போற்றும் பல்வேறு கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றன.












