கல்லடி ஸ்ரீ வேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவத் திருவிழாவின் இறுதி நாள் தீ மிதிப்பு!!
மட்டக்களப்பு, கல்லடி ஸ்ரீ வேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவத் திருவிழாவின் இறுதி நாளான இன்று (31.05.2026) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அடியவர்களின் "அரோகரா" கோசங்களுக்கு மத்தியில் தீமிதிப்பு நிகழ்வு மிக விமரிசையாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது.
கடந்த 23.05.2026 சனிக்கிழமை அன்று 'வாஸ்து சாந்தி'யுடன் ஆரம்பமான இந்த வருடாந்த அலங்கார மகோற்சவத் திருவிழா, தொடர்ந்து 9 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்தது.
விழாவின் இறுதி நாளான இன்று அதிகாலை, கல்லடி பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட தீமிதிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்கு முன்னதாக, முருகப்பெருமான் அழகிய சப்புறத்தில் எழுந்தருளி, வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து, கடுமையான விரதங்களை அனுஷ்டித்த பக்தர்கள் செந்தழல் மீது பக்திப் பரவசத்துடன் நடந்து சென்று தமது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தீமிதிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, சமுத்திர நீராடல் (தீர்த்தோற்சவம்) முடிவுற்றதும் ஆலயத்தில் பொன்னூஞ்சல் ஆகிய சிறப்பு வழிபாடுகள் இடம் பெற உள்ளன . விழாவின் நிறைவாக, ஆலயத்திற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
இந்து சமய வழிபாட்டு முறைகளில் 'தீமிதிப்பு' என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நேர்த்திக்கடனாகும். குறிப்பாக முருகன் மற்றும் காளி, மாரியம்மன், திரௌபதி அம்மன் ஆலய திருவிழாக்களில் இந்த வழிபாடு பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்து தர்மத்தில் நெருப்பு (அக்னி) என்பது அனைத்தையும் தூய்மையாக்கும் ஒரு புனிதமான சக்தியாகக் கருதப்படுகிறது. தீயில் மிதிப்பதன் மூலம் மனித உடலில் உள்ள தீய வினைகளும், மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் எரிந்து சாம்பலாகி, ஆன்மா தூய்மையடைகிறது என்பது நம்பிக்கை.
உண்மையான பக்தியும், தூய்மையான மனமும் இருந்தால் சுட்டெரிக்கும் நெருப்பும் பாதங்களைச் சுடாது" என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே இதன் பின்னணியில் உள்ளது. கடுமையான விரதங்களை மேற்கொண்டு, தங்களை இறைவனிடம் முழுமையாக ஒப்படைக்கும் பக்தர்களுக்கு அக்னி பகவான் குளிர்ச்சியான மலர்ப்படுக்கையாக மாறுவதாக ஐதீகம்.
வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், நோய்கள் மற்றும் தடைகள் யாவும் இந்த அக்னி பிரவேசத்தின் மூலம் நீங்கி, வாழ்வில் ஒளியும் வளமும் பெருகும் என்ற நம்பிக்கையிலேயே பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் இத்திருவிழாக்களில் ஆவலோடு கலந்துகொள்கின்றனர்.
ஈழத்து மண்ணில் புகழ்பெற்ற கல்லடி ஸ்ரீ வேலாயுதர் சுவாமி ஆலயத்தில், இத்தகு ஆன்மீக மகத்துவங்கள் நிறைந்த தீமிதிப்பு திருவிழா இம்முறையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்களிப்புடன் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















