மட்டக்களப்பில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ பங்கேற்பு!!
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பெயரில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு 'பிரஜாசக்தி' தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்திச் சபைகளை அமுலாக்குதல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு காத்தான்குடி கலாச்சார மண்டத்தில் இன்று (12) இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எமது நாட்டில் ஊழல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான சலுகையோ அல்லது பாதுகாப்போ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வழங்கப்படமாட்டாது என்பதுடன் வறுமையில் உள்ள குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான செயற்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
எமது நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்த்ரீநாயக்க, ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
பிரஜாசக்தி திட்டம் குறித்த விளக்கங்கள் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி. சரதாஞ்சலி மனோகரன் அவர்களினால் வழங்கப்பட்டதுடன் பிரஜாசக்தி திட்டம் தொடர்பான இணையவழித் தரவுத்தளம் மற்றும் தகவல் முகாமைத்துவ முறைமை தொடர்பான விழிப்புணர்வுகளை ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் வை. நிதுஷியா தெளிவு படுத்தினார்.














