மட்டக்களப்பில் 65 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 65 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 394 தேர்தல் விதி முறை மீறல்கள் இடம்பெற்றுள்ளதுடன் இன்றைய தினம் 121 விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் உள்ள வாக்கெண்னும் மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலை 07மணி தொடக்கம் இன்று மாலை 4.00 வரையில் தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்ற நிலையில் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து மட்டக்களப்பு பிரதான வாக்கெண்ணும் நிலையமாகிய இந்துக்கல்லூரிக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுவரும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்காக வேண்டி 22 அரிசியல் கட்சிகள் மற்றும் 27 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
மாவட்டத்தில் 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கல்குடா தொகுதியில் இருந்து 134,104 பேரும், மட்டக்களப்பு தொகுதியில் இருந்து 210,293 பேரும், பட்டிருப்பு தொகுதியில் இருந்து 105,289 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், தபால் மூல வாக்களிப்பிற்காக 14.003 பேரது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்து தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெறவுள்ளதுடன், இதில் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும் மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும் பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.
தற்போது மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 46 வாக்கெண்னும் நிலையங்களில் வாக்கெண்னும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்காக 37 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9 வாக்கெண்ணும் நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டு வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள
தேர்தல் கடமைகளுக்காக 300 இற்கும் அதிகமான வாகனங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் இதில் தனியார் பஸ்கள், அரச வாகனங்கள், தனியாருக்கு சொந்தமான வன்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிநாட்டு மற்றும் பெப்றல் போன்ற சில அமைப்புக்களும் முழு நேரமாகவும், நடமாடும் கண்காணிப்பாளர்களர்களாகவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
மாவட்டத்தில் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 1917 பொலிசார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் விசேடமாக தேர்தல் கடமைகளுக்காக பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் ஆக குறைந்த 2 வாக்காளர்களுக்கான வாக்களிக்கும் நிலையமாக இருந்து வந்த மாந்தீவு வாக்களிப்பு நிலையமானது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது, அதே போன்று பாராளுமன்ற தேர்தலிற்கும் அவர்கள் வாக்களிப்பதற்காக புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மண்பட இலக்கம் 3 இல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.