அனோஜனுக்கு கருணை காட்டுவோம்" - மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டைக்கு அழைப்பு!!

குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியாவிற்கு தொழில் நிமிர்த்தம் சென்ற அனோஜனிற்கு அந்நாட்டு சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் "அனோஜனுக்கு கருணை காட்டுவோம்"  எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டைக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அனோஜனின் விவகாரத்தை இலங்கை அரசாங்கம் மிகுந்த சிரத்தையுடன் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அனோஜனுக்கு கருணைகாட்டுமாறு கோரி மட்டக்களப்பு நகரில் எதிர்வரும் 26.09.2026 திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரைக்கும் மாபெரும் கையெழுத்து போராட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளது. 

அனோஜன் சவுதி அரேபியாவில் அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் எனும் அடிப்படையில்,  அவரது உயிரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் முன்னின்றி செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த வகையில் நாடு பூராகவும் இவருக்கு ஆதரவான பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறுபட்ட சமூக செயற்பாடுகளையும், மனிதாபிமான பணிகளையும் முன்னெடுத்து வரும் சமூக மட்ட அமைப்பு என்றவகையில் "அனோஜனுக்கு கருணை காட்டுவோம்"  எனும் தொனிப்பொருளில் சவுதி மன்னருக்கும், எமது இலங்கை நாட்டின் அதிபருக்கும் வழங்கி வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜரிற்கு கையெழுத்து சேகரிப்பினை முன்னெடுக்க நடவடிக்கை அடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும், சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சமாதான நீதவானும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாநிதி உ.உதயகாந்த் (JP)  இந்த விடையம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு அழைப்புவிடுத்துள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மனிதாபிமான செயற்பாடுகளிற்கு ஒரு போதும் பின்னிற்பவர்கள் அல்ல என தெரிவித்ததுடன், எதிர்வரும் சனிக்கிழமை காந்தி பூங்கா முன்பாக இடம்பெறவுள்ள இம் மாபெரும் கையொழுத்து சேகரிப்பின் போது சர்வ மத தலைவர்களையும், சமாதான நீதவான்களையும், அரசியல் பிரதிநிதிகளையும், புத்தி ஜீவிகளையும், சமூக செயற்பாட்டாளர்களையும், வர்த்தக சங்க பிரதிநிதிகளையும், சர்வமத அமைப்பின் பிரதிநிதிகளையும்,  பல்கலைக்கழக மாணவர்களையும், விளையாட்டு கழக பிரதிநிதிகளையும், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், இளைஞர், யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனோஜனிற்கான கருணை கோரும் மனுவில் கையொப்பமிட ஆர்வமாய் இருக்கின்ற சமூகப் பற்றாளர்கள் அனைவரையும் மனித நேயம்மிக்க இக் கைங்கரியத்தில் பங்கேற்குமாறு பணிவன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அனோஜனின் விவகாரத்தை காற்பந்து போல் வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக எவரும்  பயன்படுத்த வேண்டாமெனவும், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து செயற்பட வேண்டுமே தவிர வேறு எந்த உள் நோக்கத்துடனும் செயற்பட கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.