தேசிய மேடையில் சாதனை படைத்த மட்டு/ புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் - பிரதமரிடம் விருதுகளை வென்று சாதனை!!
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான குறு நாடகப் போட்டியில், மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் மற்றும் அதன் ஆசிரியர் ஆர்.என்.ஆர்.அரவிந்த் ஆகியோர் வரலாற்றுச் சாதனை படைத்து, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் கரங்களால் தேசிய விருதுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கை முழுவதுமிருந்து 35 இற்கு மேற்பட்ட முன்னணிப் பாடசாலைகள் போட்டியிட்ட இந்தத் தேசிய அளவிலான குறு நாடகப் போட்டியில், மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் முதன்முறையாகக் களம் இறங்கிய தனது முதல் பங்கேற்பிலேயே, ஒட்டுமொத்தப் போட்டியில் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தைக் கைப்பற்றி இப்பாடசாலை வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளது.
இப்போட்டியில் இப்பாடசாலை சமூகம் மொத்தம் 4 தேசிய விருதுகளை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
சிறந்த நடிப்புக்கான சிறப்பு விருது - பாடசாலை மாணவன் கணேசமூர்த்தி சஞ்ஜய்க்கும், சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume) விருது - ஆசிரியர் ஆர்.என்.ஆர்.அரவிந்த்திற்கும், சிறந்த அசைவாக்கம் (Best Choreography/Movement) விருது - ஆசிரியர் ஆர்.என்.ஆர்.அரவிந்த்திற்கும் கிடைத்துள்ளது.
இப்போட்டிக்கான முழுமையான பயிற்சிகளை வழங்கி, மாணவர்களைத் தேசிய மேடைக்குத் தயார்படுத்திய பெருமை ஆசிரியர் ஆர்.என்.ஆர்.அரவிந்த் அவர்களையே சாருமென பாடசாலை சமூகம் பெருமை கொள்கின்றது.
பாடசாலை வரலாற்றிலேயே தேசிய மட்டத்தில் இத்தகைய பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
பிரதமரால் குறித்த கௌரவிப்பு கடந்த மே 15 அன்று கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள டவர் அரங்க மண்டபத்தின் தலைமைக் காரியாலயத்தில், மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நாட்டின் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கான விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.



