சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பெயரில் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப் பிள்ளை சதீசன் தலைமையில் சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் அவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு இன்று (07) வரவேற்கப்பட்டார்.
அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு பல கோடி பெறுமதியான இயந்திரத்தை கையாள்வது தொடர்பான பயிற்சிகளை இரண்டு வார காலம் மைதானத்தில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்கவுள்ளார்.
எதிர் வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் கோட்டைமுனை விளையாட்டு புற்தரை மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் ஆடுகளங்களை சிறந்த முறையில் தயார் செய்வதற்கு இவரின் பயிற்சிகள் முக்கியம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வட கிழக்கு மாகாணத்தில் புற்தரையிலான கிரிக்கட் மைதானம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளதுடன் இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக மாற்றுவதற்கும் அவர்களை தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரட் வப்டிஸ் சர்வதேச தரத்தில் இவ் மைதானம் காணப்படுவதுடன் இப்பிரதேசத்தில் இருந்து முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் எதிர்காலத்தில் வரவாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.




