மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா: சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜினால் மந்திர தீட்சை வழங்கல்!!

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜினால் மந்திர தீட்சை வழங்கும் ஆன்மீக நிகழ்வு கடந்த (17) திகதி மட்டக்களப்பு ராமகிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்றது.
நவம்பர் 12ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மட்டக்களப்பில் விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு 69 பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கினார். 

ராமகிருஷ்ண சங்கத்தின் ஆன்மீக மரபின்படி, மந்திர தீட்சை என்பது குருவின் வழிகாட்டுதலுடன் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் உபதேசிக்கப்படும் முக்கியமான ஆன்மீகச் சடங்காகும். இது ஆன்மீக சாதனைகளை முன்னெடுப்பதற்கான வழிகாட்டுதலாகவும் பக்தர்களின் ஆன்மீக வாழ்வில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வாகவும் அமைகின்றது. 

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு ஆன்மீக மற்றும் சமய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இம்மந்திர தீட்சை நிகழ்வு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







Powered by Blogger.