அறுசுவை அடங்கிய உணவே ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கும்!

தொகுப்பு - எம்.உமாகரன் (தாதிய உத்தியோகத்தர்)

நமது முன்னோர்கள் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை மனதிற்கொண்டு பல ஆயிரம் வருடங்களில் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு பருவக் காலங்களுக்கு ஏற்ப உணவு முறைகளை வகுத்துள்ளனர்.

உடலில் நோய் பற்றுவதற்கு மூலக் காரணங்களாக அமைவது எமது அன்றாட உணவு முறைகளாகும். தன் உடல் நிலைக்கேற்ற உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டு வந்தால் எக்காலத்திலும் நோய் பற்றாது, ஆரோக்கியத்துடன் வாழமுடியும்.

தினசரி நாம் உண்ணும் உணவில் வாதம், பித்தம், கபம் தாதுக்களை ஈடு செய்வதற்கு ஏற்ப உணவுப் பொருட்கள் அமைந்துள்ளன.

ஆகையினால், உடலுக்கு ஏற்காததை விலக்கிவிட்டு எற்பதை மட்டும் உண்டால் நோய் உடலைப் பீடிக்காது. சத்துள்ள உணவு வகைகளையும் உண்பதனால் எமது உடல் திடமாகவும் இருக்கும்.

நாம் உண்ணும் உணவில் பலவிதமான சத்துக்கள் அடங்கி இருந்தாலும், எம் உடலுக்குத் தேவைப்படுவது ஆறு வகையான சத்துக்களாகும்.

அதாவது புரதச்சத்து, மாச்சத்து, கொழுப்புச்சத்து, உலோகச்சத்து, நீர், விற்றமின் எனப்படும் உயிர்ச்சத்து போன்ற ஆறு வகையான சத்துக்கள் எம் உடலுக்கு அவசியமாகிறது.

இந்த சத்துக்கள் அடங்கிய உணவை சீரான அளவில் உண்ணாமையினால் உடல் பலவீனமடைந்து தனது செயற்திறனை இழந்து நோய்க்கு ஆளாகிவிடுகிறது.

இதன் காரணமாக நீரிழிவு, காசநோய், சுவாசகாசம், இருதய நோய், நரம்புத் தளர்ச்சி, மூட்டுவலி போன்ற பல நோய்கள் உண்டாகின்றன.

இந்நோய்களைப் போக்குவதற்கும், உடலில் குறைந்துள்ள சத்துக்களைத் திரும்பப் பெறுவதற்கும் பாரிய செலவை செய்கின்றனர்.

இழந்த சக்தியைப்பெற விற்றமின் மாத்திரைகளை எடுக்கின்றனர். அதை குறிப்பிட்ட எல்லைக்குமேல் எடுத்தால் புற்று நோய்க்கு வழி வகுக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆகையினால், மருந்து மாத்திரைகளை விட இயற்கையாவே கிடைக்கின்ற காய், கனி, கீரைகளில் விற்றமின் சத்துக்கள் உள்ளமையால் எமது அன்றாட உணவில் இதனைப் பயன்படுத்தி அதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.

விற்றமின் "A" சத்து குறையும்போது நோய்கள் மிக எளிதாக எமது உடலை 
தொற்றிக்கொள்ளும். எலும்பு வளர்ச்சியும் மிகவும் பாதிப்புக்குள்ளாகும்.

வாழைப்பழம், மாம்பழம், பப்பாளிப்பழம், பச்சைக் கொத்துமல்லி, புதினாக்கீரை, அகத்திக்கீரை, பச்சைப்பட்டாணி, கரட், தக்காளி போன்றவற்றின் மூலம் விற்றமின் "A" சத்தைப்பெறலாம்.

இதுபோன்று எமது உடல் நலத்தைக் காக்கும் விற்றமின் "A, B, C, D, E, K" என்பவைகள் காய் - கனி - கீரை வகைகளில் இருக்கின்றன.

ஆகையினால், எல்லாச் சத்துக்களும் அடங்கிய இவைகளை நாம் உண்ணும் உணவில் எந்த சத்துக் குறைவு உள்ளதோ அதற்கேற்ப, உடல்நலம் பாதிக்காத வகையில் தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொள்ளவேண்டும். நாம் உண்ணும் உணவில் இவ்வகைகளைச் சேர்த்துக் கொள்வதின் மூலம் எம்மை நோய் அணுகாமல் உடல் பாதுகாப்புடன் வாழமுடியும்.

நாம் உண்ணும் உணவு, சத்துக்கள் நிறைந்த உணவாக உண்ணா விட்டால் வலுக்குறைந்து - சக்தி குறைந்து - சோர்வு ஏற்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் களைப்பு ஏற்பட்டுவிடும்.

உடலில் போதிய சத்துக்கள் இல்லாவிட்டால் பலவிதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்பாகி விடுகிறது. ஆகையினால் சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளை வரையறுத்து நாம் உண்ண வேண்டும். 

உடலுக்கு முக்கியமாகத் தேவைப்படும் புரதச்சத்து குறையுமானால் உடலின் தசைகள் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். இதனால் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற நோய்கள் உண்டாகும்.

உடலுக்கு உலோக சத்துக்கள் அவசியம் தேவை. அதில் முதன்மை பெற்றது இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் ஆகும். சுண்ணாம்புச் சத்துக் குறைவு ஏற்பட்டால் எலும்புகளையும், இருதயத்தையும் பாதிக்கும். இரும்புச் சத்துக் குறைவு ஏற்பட்டால் உடல் பலவீனமடைந்து சோகை தோன்றும்.

ஆகையினால், உணவில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள காய் - கீரை - கனிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற உடல்நலம் காக்கும் எண்ணற்ற உயிர்ச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும் காய் கனி - கீரைகளில் அடங்கியுள்ளன.
நாம் உண்ணும் உணவில் அறுசுவைகள் அடங்கி இருந்தால்தான் உடலில் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த அறுசுவைகளில் குறிப்பாக கசப்பு, துவர்ப்பு ஆகிய இரு சுவையுள்ள பொருட்கள் பெரும்பாலனவர்கள் உண்பது இல்லை. அதனால்தான் உடலில் நோய்கள் வருகின்றன.

நாம் உண்ணும் உணவில் காய் - கனி - கீரைகளைச் சேர்த்துக் கொண்டால் உடல் நலமுடன் இருக்கும். உடல்நலம் பாதிக்கப்பட்ட சிலர் பல மருந்துகளை எடுத்தும், அந்த நோய் குணமாவதில்லை. அவர்கள் காய் - கனி கீரையிலுள்ள சத்துக்களை உணவின் மூலம் பெற்று நோயைக் குணமாக்கிக் கொள்ள வேண்டும். நோய் வந்து வேதனைப்படுவதை விட வரும்முன் காப்பதே நல்லது.

நாம் ஒவ்வொருவரும் அவரவர் உடல்நலத்தைக் காக்கும் பொருட்டு எந்தச் சத்துக் குறைவினால் உடல் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப சத்துள்ள காய் - கனி - கீரை வகைகளை உண்ண வேண்டும்.

பொதுவாக மாமிச உணவைவிட சைவ உணவு வகைகளில்தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக காய், கனி, கீரைகளில் அபரிமிதமான சத்துக்களுடன் நோய் தீர்க்கும் ஆற்றலும் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு நாம் செயற்படுவோமாக இருந்தால் எம்மை எந்த நோயும் அணுகாது என்பது திண்ணம்.

Powered by Blogger.