பேனிகுலிடிஸ் நோய் (Panniculitis)

திருமதி. ரஜிதா உமாகரன் (தாதிய உத்தியோகத்தர்)

பேனிகுலிடிஸ் என்பது தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பு அடுக்கு (Subcutaneous fat) வீக்கமடைவதால் ஏற்படும் ஒரு நோய் பாதிப்பாகும். இது தோலில் சிவந்த, வலிமிகுந்த கட்டிகளாகத் தோன்றும். குறிப்பாக, கொழுப்புத் திசுக்களில் ஏற்படும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்தே இதன் தாக்கம் காணப்படும். இந்த நோய்த் தாக்கம் செப்டல் பேனிகுலிடிஸ் (Septal Panniculitis), லோபுலர் பேனிகுலிடிஸ் (Lobular Panniculitis) என இரண்டு பிரிவுகளாக தாக்குகின்றது. இந்த நோய்த் தாக்கம் இலட்சத்தில் ஒருவருக்கே ஏற்படுகின்றது.

செப்டல் பேனிகுலிடிஸ் (Septal Panniculitis) என்பது, உடம்பிலுள்ள கொழுப்புத் திசுக்களுக்கு இடையே உள்ள இணைப்புத் திசுக்களில் (Septa) வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை, எரிதிமா நோடோசம் (Erythema Nodosum) எனவும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் கால்களின் முன்பகுதியில் (முழங்காலுக்குக் கீழ்) சிவந்த கட்டிகளாகத் தோன்றும்.

லோபுலர் பேனிகுலிடிஸ் (Lobular Panniculitis) என்பது, உடம்பிலுள்ள கொழுப்புத் திசுக்களின் பிரதான பகுதிகளில் (Lobules) நேரடியாக வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது தோலில் தோன்றி வலிமிகுந்த வீக்கங்களையும், கட்டிகளையும் ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட இடமும் சிவந்து காணப்படும். பெரும்பாலும் இது கால்களில், முக்கியமாக முழங்காலுக்குக் கீழ் தொடங்கினாலும், தீவிர நிலைகளில், உடலின் பிற பகுதிகளிலும் தோன்றும் தன்மை கொண்டது. குறிப்பாக, தொடைகள் மற்றும் பிட்டம் (Buttocks) கைகள் மற்றும் முகம், வயிற்றுப் பகுதியிலுள்ள உட்புறக் கொழுப்புத் திசுக்களிலும் (Mesenteric panniculitis) பாதிப்பை ஏற்படுத்துகிறது.

​இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக​, தோலின் அடியில் மென்மையான, வலிமிகுந்த சிவந்த கட்டிகள் அல்லது முடிச்சுகள் (Nodules) தோன்றும், பாதிக்கப்பட்ட இடங்களில் வீக்கம் மற்றும் சூடான தன்மையை உணரக்கூடியதாக இருக்கும், சில நேரங்களில் இந்தக் கட்டிகள் மறைந்த பிறகு அந்த இடத்தில் பள்ளம் போன்ற வடுக்கள் அல்லது நிறமாற்றம் ஏற்படும்.
இதனால் காய்ச்சல், உடல் சோர்வு, மூட்டு வலி மற்றும் எடை குறைதல் போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.

​இந்நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியதாக உள்ளது. அதாவது பக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுகள் மூலமாகவும், கிரோன் நோய் (Crohn’s disease) அல்லது அல்சரேட்டிவ் கோலிடிஸ் போன்ற குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படலாம். சில வகையான சல்பர் மருந்துகள் அல்லது கருத்தடை மாத்திரைகளின் பக்கவிளைவுகளாலும், கணையத்தில் ஏற்படும் வீக்கம் அல்லது புற்றுநோய், லூபஸ் (Lupus) அல்லது ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் போன்ற நோயெதிர்ப்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகளாலும், தோலின் அடியில் ஏற்படும் பலத்த காயங்கள் அல்லது அதிகப்படியான குளிருக்கு ஆளாகுவதாலும் இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

​இதற்கான சிகிச்சை நோயின் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்தே அமைகிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வு அளித்தல் மற்றும் கால்களை உயர்த்தி வைப்பதால் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, ​தோலில் விவரிக்க முடியாத வலிமிகுந்த சிவப்புக் கட்டிகள் தோன்றினால் அல்லது அத்துடன் காய்ச்சல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தோல் வைத்திய நிபுணரை (Dermatologist) அணுகுவது மிக அவசியமாகும்.

​கால்களில் வீக்கம் அதிகமாக இருந்தால், அமர்ந்திருக்கும் போதோ அல்லது படுக்கும் போதோ கால்களை இதய மட்டத்திற்கு மேல் உயர்த்தி வைப்பது (Elevation) இரத்த ஓட்டத்தைச் சீராக்கி வீக்கத்தைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது. அத்துடன் வீக்கம் உள்ள இடத்தில் ஐஸ் பேக் அல்லது குளிர்ந்த துணியால் ஒத்தடம் கொடுப்பது தற்காலிக நிவாரணியாக அமையும். 

சில வகை பேனிகுலிடிஸ் குணமாகும்போது, அந்த இடத்தில் உள்ள கொழுப்பு கரைந்து போவதால் தோலில் நிரந்தரமான பள்ளங்கள் ஏற்படலாம். கட்டிகள் மறைந்த பிறகு அந்த இடம் கபில நிறமாக (Brownish) மாறக்கூடும். ​மிக முக்கியமாக, ​கட்டிகள் உடைந்து அதிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வெளியேறினால், ​மிக அதிகப்படியான காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம், ​உடல் எடை மிக வேகமாகத் தன்னிச்சையாகக் குறைதல்,​மூச்சு விடுவதில் சிரமம் அல்லது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியரை அணுகவேண்டும்.

பொதுவாக, பேனிகுலிடிஸ் பாதிப்பு உள்ளவர்கள் பின்வரும் மூன்று நிலைகளில் ஏதேனும் ஒன்றை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இக்கட்டிகள் ஏற்பட்ட இடங்களில் மட்டும் அதாவது, கால்களில் அல்லது கைகளில் மட்டும் சிவந்த வீக்கம் இருந்து, காய்ச்சல் போன்ற இதர பாதிப்புகள் இல்லை என்றால், இது பெரும்பாலும் தோல் சார்ந்த அலர்ஜியாகவோ அல்லது சிறிய தொற்றாகவோ இருக்கலாம். இதற்கு முறையான Ointments மற்றும் ஓய்வு போதுமானதாக இருக்கும்.


​கட்டிகளுடன் சேர்ந்து மூட்டு வலி, கடுமையான உடல் சோர்வு அல்லது வயிற்று வலி இருந்தால், அது உடலின் உட்புற உறுப்புகளில் (கணையம் அல்லது குடல்) ஏதோ ஒரு மாற்றத்தை அவதானிக்கும்போது இரத்தப் பரிசோதனைகள் மூலம் உட்புற உறுப்புகளின் செயல்பாட்டைச் அறிந்துகொள்ள முடியும். ​சிலருக்கு இந்தக் கட்டிகள் வந்து வந்து போகும். ஒருமுறை குணமாகிவிட்டு சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ தோன்றும். இது பெரும்பாலும் ஓட்டோ இம்யூன் (Auto-immune) எனப்படும். இது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலமே திசுக்களைத் தாக்கும் நிலைமையில் இருக்கும்.

அதிக உடல் எடை, கால்களில் உள்ள கொழுப்புத் திசுக்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுப்பதால், அதன் வீக்கம் கூடிக்கொண்டு செல்லும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும். அதனால் உடல் எடையைச் சீராக வைத்திருப்பது வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. உடலில் அழற்சியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

குறிப்பாக இஞ்சி, மஞ்சள், பழங்கள் மற்றும் காய்கறிகள் (Anti-inflammatory foods) உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்ப்பதுடன்,
​புகைபிடித்தலை முற்று முழுதாக தவிர்க்க வேண்டும். இல்லை என்றால், இரத்த ஓட்டத்தைப் பாதித்து கட்டிகள் குணமடைவதை தாமதப்படுத்தும் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

​பேனிகுலிடிஸ் நோயின் வகையைப் பொறுத்தே இதை முற்றிலும் குணப்படுத்த முடியுமா அல்லது முடியாத என்ற தீர்மானத்தை வைத்தியர்களினால் முடிவு எடுக்கப்படும் என்றும் வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
​தொற்று அல்லது மருந்தின் பக்கவிளைவால் இது ஏற்பட்டால், அதற்கான சிகிச்சைக்குப் பிறகு இது மீண்டும் வராமல் தடை செய்யலாம் என்றும் நாள்பட்ட நோய்களான லூபஸ் அல்லது கணையப் பிரச்சினைகளால் ஏற்பட்டால், அடிப்படை நோய் மீண்டும் தீவிரமடையும்போது அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

​எமது தோல் மூன்று அடுக்குகளைக் கொண்டது. புறத்தோல் (Epidermis), உள்தோல் (Dermis) மற்றும் அதற்குக் கீழே உள்ள கொழுப்பு அடுக்கு (Subcutaneous fat). இந்த கொழுப்பு அடுக்கில் இரத்த நாளங்கள் மற்றும் இணைப்புத் திசுக்கள் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் (தொற்று அல்லது நோயெதிர்ப்பு பிரச்சினை) இந்த கொழுப்பு செல்கள் சிதைவடையும்போது, எமது உடல் அதை ஒரு காயமாகக் கருதி அங்கு வெள்ளை இரத்த அணுக்களை அனுப்புகிறது. இதனால் அந்த இடத்தில் வீக்கம், சிவப்பு நிறம் மற்றும் வலி உண்டாகுவதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

​சில நேரங்களில் பேனிகுலிடிஸ் என்பது ஒரு தனி நோயாக இல்லாமல், உடலிலுள்ள வேறு ஒரு பெரிய பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
​அல்ஃபா-1 அன்டிட்ரிப்சின் குறைபாடு (Alpha-1 Antitrypsin Deficiency) இது ஒரு மரபணு பிரச்சினையாக இருந்தால், இது கல்லீரல் மற்றும் நுரையீரலைப் பாதிப்பதோடு தோலில் பேனிகுலிடிஸையும் ஏற்படுத்துகிறது.

​கணைய அழற்சி (Pancreatitis) என்றால், கணையத்தில் இருந்து வெளியேறும் சில என்சைம்கள் இரத்தத்தின் வழியாகச் சென்று தோலின் அடியில் உள்ள கொழுப்பைக் கரைக்கத் தொடங்கும். இது வலிமிகுந்த காயங்களை ஏற்படுத்துகிறது.

​இரத்த நாள வீக்கம் (Vasculitis) என்றால், இரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியும் கொழுப்பு திசுக்களைப் பாதிக்கலாம்.
​கால்களில் பாதிப்பு இருந்தால், நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது மென்மையான காலணிகளை அணிய வேண்டும். மருந்துகளை இடையில் நிறுத்தாமல் வைத்தியர் சொன்ன காலம் வரை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக ஸ்டெராய்டுகளை திடீரென நிறுத்தினால் நோய் மீண்டும் தீவிரமாகத் தொடங்கும்.

சில நேரங்களில் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு
போன்ற அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக தோல் மருத்துவ நிபுணர் ஒருவரை (Dermatologist) அணுகி முறையான பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையை முறையாக முன்னெடுப்பது மிக அவசியமாகும்.

எனவே, பேனிகுலிடிஸ் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் மிக அவதானத்துடன் வைத்திய நிபுணரின் ஆலோசனையின் பிரகாரம் அவர்களின் பரிந்துரையின் கீழ் பரிந்துரைக்கப்படுகின்ற மருத்து மாத்திரைகளை மட்டுமே முறையாக எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வேறு பிரச்சினைகளையும், நோயின் தீவரத் தன்மையையும் அதிகரிக்கும் வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொண்டவர்களாக ஆளாகி விடுவோம். என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.


Powered by Blogger.