கதிரவன் கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வும் கதிரவன் வழங்கும் உயர் விருதான "கதிரவன் விருது - 2026" மற்றும் "ஊரில் இருந்து உலகம் வரை நூல் வெளியீடும் " கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையில் நேற்று 27.09.2026 திகதி நடைபெற்றது.
இதன்போது அதிதிகள் சிறப்பு கௌரவமளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரம்பமாகிய நிகழ்விற்கு அதிதிகளாக சமய தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவில் இருந்து வருகை தந்த பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச திணைக்களங்களின் உயிர் அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதன்போது "ஊரில் இருந்து உலகம்" வரை நூல் வெளியீடு இடம்பெற்றதுடன், கதிரவன் கலைக்கழகத்தின் ஸ்தாபகர் பொன்னாடை போர்த்தி கீரீடம் சூடி, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், தற்போதைய தலைவர் கதிரவன் த.இன்பராசாவும் இதன்போது பொன்னாடை போர்த்தி கிரீடம் சூடி மலர் மாலைகள் அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.
பொன்விழாவினை சிறப்பித்து 50 பேராளர்களுக்கு விருது வழங்கப்பட்டதுடன், இவ்விருது கதிரவன் முன்னேற்றத்திற்காக ஆதரவு வழங்கி, சமூக நற்பணிகளோடு இணைந்து செயற்படும் சமூகப் பற்றாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய மகேஸ்பரம் கோபிநாத் சமூக நற்பணிகளுக்கான சமூக சேவையாளராக தெரிவு செய்யப்பட்டு கதிரவனின் உயரிய விருதான "கதிரவன் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் சமூக செயற்பாட்டாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாநிதி உ.உதயகாந் அவர்களும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் பலரும் இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






